search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் சாலை மறியல்"

    திண்டுக்கல் அருகே இலவச அரிசி குறைத்து வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச அரிசி ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் அருகே கொம்பேறிபட்டியில் ரேசன் கடை உள்ளது. இங்கு அம்மானியூர் கொம்பேறிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இவர்களுக்கு புழுங்கல் மற்றும் பச்சரிசி வழங்குவது வழக்கம்.

    இந்த மாதம் குறைந்த அளவே ஸ்டாக் வந்ததால் பொதுமக்களுக்கும் பச்சரிசி மட்டும் குறைந்த அளவு வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் ரேசன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் ஊழியர்கள் குறைந்த அளவே ஸ்டாக் வந்துள்ளதால் வேறு வழியில்லை. இந்த மாதம் அரிசி குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது என கூறி உள்ளனர்.

    இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் திடீரென அய்யலூர்-வேடசந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த வடமதுரை போலீசார் கிராம மக்களிடம் சமரசம் பேசினர். அரிசி வழக்கமான அளவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×